• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் ஆலோசனை

இலங்கை

நாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (25) காலை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, இந்த நாடாளுமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த நிறுவனம் உள்ளடக்கிய பொறுப்புகள் பற்றிய ஆழமான புரிதலுடன் நாம் நமது கடமைகளை அணுக வேண்டும்.

22 பெண் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், எமது நாடாளுமன்றம் வரலாற்றில் பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவத்தை குறிப்பிடும் வகையில், பல காரணங்களுக்காக இந்த நாடாளுன்றம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார்.

225 எம்.பி.க்களில் 162 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இந்த குறிப்பிடத்தக்க வருகை பொதுமக்களின் உணர்வையும் முந்தைய நாடாளுமன்ற நடைமுறைகளை நிராகரித்ததையும் பிரதிபலிக்கிறது.

இந்த நாடாளுமன்றம் அரசியல் நடைமுறையில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும்.

அதன் மரபுகளை பாதுகாத்து நாடாளுமன்ற நடைமுறைகளை புதுமைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார்படுத்துவதில் இந்த செயலமர்வு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, பிரதிக் குழுத் தலைவர் ஹேமலி வீரசேகர, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, புதிதாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் , துணைப் பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், முக்கியஸ்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply