• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு

இலங்கை

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும்,  அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர்  அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும்.

அத்துடன் அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” இவ்வாறு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply