அதானியின் இலங்கை திட்டம் குறித்து அமெரிக்க நிறுவனம் உரிய கவனம்
இலங்கை
இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் கொழும்பு, துறைமுக அபிவிருத்திக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம், குறித்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் நிறுவனத்தின் பிற உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற குறித்த அமெரிக்க நிறுவனம், கடன் தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஓரளவுக்கு அதானி குழுமத்துக்குச் சொந்தமானது.
எந்தவொரு கடன் வழங்குதலும் செய்யப்படுவதற்கு முன்னர் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் எங்களின் கடுமையான தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து கவனமாக இருக்கிறோம் என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதானி துறைமுகம் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) லிமிடெட் மூலம் அபிவிருத்தி செய்யப்படும் இலங்கையின் தலைநகரில் உள்ள துறைமுக முனையத்திற்கு நிதியுதவி வழங்குவதாக கடந்த ஆண்டு நிறுவனம் அறிவித்தது.
இது ஆசியாவில் அமெரிக்க நிறுவனத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீடாகும்.
அமெரிக்க வழக்கறிஞர்கள் கடந்த வாரம் கௌதம் அதானி மற்றும் பிற பிரதிவாதிகள் மீது இந்திய சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களை பெற $250 மில்லியன் டொலர் லஞ்சம் வழங்கும் திட்டத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டினர்.
நிறுவனம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் சட்டப்பூர்வ உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், அதானி குழுமத்தின் நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களை இலங்கை மீளாய்வு செய்து வருவதாகவும், அமைச்சரவை எதிர்வரும் வாரங்களில் இந்த முன்மொழிவை விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளரை மேற்கோள்காட்டி The Sunday Morning செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தற்போது திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருகிறது.