நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குப் பதிவு
இலங்கை
இன்று மாலை 4 மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 70 % வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் வாக்களிப்புகள் எவ்விதமான அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியான முறையில் நடைப்பெற்றதாகவும், பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் மேற் கொண்டார்கள் எனவும் அதிகாரிகள் தமது கடமைகளை சிறப்பான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் காலை 09 மணி வரை 20 வீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. எனினும் 12 மணியளவில் அது 40 வீதமாகவும், 01 மணியளவில் 55 வீதமாகவும் வாக்களிப்புகள் இடம் பெற்றன.
நுவரெலியா மாவட்டத்திற்கு சர்வதேச கண்காணிப்பு குழு உறுப்பினர்களும் விஜயம் செய்துள்ளனர். பொதுவாகவே இந்த தேர்தல் மிகவும் அமைதியாக இடம் பெறுவதாக மக்களும் கருத்து தெரிவித்தனர்.
தேர்தல் வாக்களிப்பு நடைப்பெற்ற பொழுது அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக வாக்களிப்பு நடைப்பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுப்பட்டனர். வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.