• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் உள்ள மக்களுக்கு பாரிய ஆபத்தாக உள்ள கட்டிடம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இலங்கை

கொழும்பு கோட்டையில் உள்ள 60 மாடிகளை கொண்ட கிரிஷ் கட்டிடத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கிரிஷ் கட்டிடத்துன் உரிமை நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடாக நிர்மாணிக்க ஆரம்பித்த இந்தக் கட்டிடம் கொழும்பு கோட்டையில் உள்ள மிக உயரமான கட்டிடமாகும்.

கடந்த கொரோனா காலப்பகுதியில் இங்கு நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர்

 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் இதன் கட்டுமானம் முற்றாக நிறுத்தப்பட்டது.

இக்கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிலையில், அதன் சில சிதைவுற்ற பாகங்கள் கீழே விழுந்தவாறு உள்ளன.

கடந்த ஒக்டோபரில் இதுபோன்ற விபத்தில் கார் ஒன்று பலத்த சேதமடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த கட்டிடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததுடன், அது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதற்காக, கோட்டை பொலிஸாரின் அறிவித்தலின் பேரில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர், சேதமடைந்த காரின் உரிமையாளர், அது நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடத்தின் உரிமையாளர் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

கிரிஷ் கட்டிடம் சார்பில் கட்டுமான நிறுவனத்தின் சில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இரு தரப்பினரின் சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி, கிரிஷ் கட்டிடத்திலிருந்து எந்த ஒரு பொருளும் கீழே விழுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவு வழங்கியுள்ளார்.

மேலும், பழுதடைந்த துண்டுகள் கீழே விழுந்து, விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கட்டடத்தில் ஏதாவது விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான கட்டிடம் தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள், அதிலிருந்து விழக்கூடிய இரும்பு பாகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
 

Leave a Reply