கங்குவா திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி
சினிமா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, டிசம்பர் 11ம் தேதிக்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வசூலிக்க சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இந்தி உரிமை வழங்குவதாக கூறி பெற்ற ரூ.1.60 கோடியை திரும்ப தரக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ரூ.1.60 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடி செலுத்திய நிலையில் மேலும் ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.