• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக தன்னை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் ஆலோசனைகளை நேற்று நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் அமைச்சர் விஜித ஹேரத்திடம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். நாம் செய்யப் போவது பாரிய குற்றம் என்று எம்மை அச்சமூட்டி, இந்த அறிக்கைகள் வெளியிடுவதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் பேய்க்கு அஞ்சாத காரணத்தினால்தான் மாயானத்தில் வீடுகளை அமைந்துள்ளோம் என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இமாம் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜுலை 25 ஆம் திகதி கிடைத்துள்ளது.

ஆனால், மூன்று மாதங்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கை இருந்தும் அவர் அதனை வெளியிடவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அந்த அறிக்கை கிடைத்து, மூன்றே வாரங்களில் வெளியே வந்துவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயற்பட்டாலும், அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயற்படவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, ஜனாதிபதி செயலகத்தின் ஆவணங்களை கசியவிடும் அந்த எலி யார் என்பதை கண்டறிவது, அரசாங்கத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று நான் அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்த அறிக்கைகளை வெளியிடும்முன்னர், அரச இரகசிய ஆவணங்களை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாகவோ அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாவோ என்னை கைது செய்ய அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக நேற்றிரவு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. எனக்கு கிடைத்த இரண்டு அறிக்கைகளும், இணைப்புக்களுடன்தான் கிடைத்துள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக கடந்த 25 வருடங்களாக அக்கரைக் கொண்ட நபர் என்ற வகையில், நான் எந்தவொரு இணைப்புக்களையும் வெளியிட மாட்டேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை தங்களிடம் கிடைத்தவுடன், வெளிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, நான் என்னிடம் உள்ள அறிக்கைகளை ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க மாட்டேன்.

ஆனால், எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த அறிக்கைகளை வெளியிடாவிட்டால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுவேன்” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply