• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 1,88,222 பேரும் சம்மாந்துறையில் 99,727 பேரும் கல்முனையில் 82,830 பேரும் பொத்துவில் தொகுதியில் 1 இலட்சத்து 84 ஆயிரத்து 653 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும். தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply