அருவருப்பு, ஆபாசம் - போலி வீடியோ பரப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என நடிகை எச்சரிக்கை
சினிமா
சுனைனா தனது முகத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரித்தவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தனியுரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தலாகும். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய வீடியோக்களை பகிராமல், உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சுனைனா, தனது முகத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலியாகவும் ஆபாசமாகவும் வீடியோ தயாரித்து இணையத்தில் பரப்பியவர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது முகத்தை எனது அனுமதியின்றி ஆபாசமான வீடியோவில் டிஜிட்டல் முறையில் இணைத்துள்ளனர். இந்த அருவருப்பான மற்றும் வஞ்சகமான செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அந்த வீடியோவிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனுடன் என்னை இணைத்துப் பேசப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்.
இது எனது தனியுரிமை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தின் மீதான தீவிர தாக்குதலாகும். இது பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு பரப்பும் செயலாகும்.
இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், பதிவேற்றியவர்கள், வாட்ஸ்அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் உடனடியாக அதை நீக்க வேண்டும். வீடியோவை உருவாக்கியவர்கள் மட்டுமின்றி, அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்பவர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கைகள் பாயும்.
இத்தகைய போலி வீடியோக்களை யாரும் பார்க்கவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், இணையத்தில் எங்கேனும் இந்த வீடியோ தென்பட்டால் அதை உடனடியாக ரிபோர்ட் செய்யுமாறும் தனது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





















