• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கான் பயிற்சி மையத்தில் புதிய விதிமுறை - கைபேசிகளுக்கு முழுத் தடை

கனடா

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் தாயார் பைசா லாமாரி, நோர்மண்டி பகுதியில் உள்ள கான் (Caen) கால்பந்து மன்றத்தின் பயிற்சி மையத்தில் இளம் வீரர்களின் கைபேசிப் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளமை விளையாட்டு உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கான் கால்பந்து மன்றத்தின் பெரும்பான்மை பங்குதாரராக கிலியன் எம்பாப்பே உள்ள நிலையில், மன்றத்தின் நிர்வாக மற்றும் இளம் வீரர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவரது தாயார் பைசா லாமாரி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மன்றத்தின் புதிய கால்பந்து இயக்குநரான மாத்தியூ போட்மர், இந்த முடிவை வரவேற்று, இளம் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தனிமனித வளர்ச்சிக்கு இது முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஊடகமான L'Équipe நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர், "இளைஞர்களுக்கான திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கல்வி, தங்குமிடம், ஊட்டச்சத்து மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

மேலும், "பயிற்சி மையத்தில் கைபேசிகளுக்கு பைசா லாமாரி தடை விதித்துள்ளார். இது மிகவும் சிறந்த முடிவு.

இதன் மூலம் இளம் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக உரையாடி, குழுவாக இணைந்து வாழவும் பழகுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 2024 ஆம் ஆண்டு எம்பாப்பே குடும்பம் கான் கால்பந்து மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அணி மூன்றாம் நிலை லீக்கிற்கு தரம் தாழ்த்தப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், அந்த விமர்சனங்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்ட மாத்தியூ போட்மர், எம்பாப்பே குடும்பம் பொறுப்பேற்கும் முன்னரே மன்றம் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், தற்போது மன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடினமான காலகட்டத்தில் கான் கால்பந்து மன்றத்தில் கிலியன் எம்பாப்பே முதலீடு செய்தமைக்கு தாம் பெரும் மரியாதை கொள்வதாகவும், அவரது பங்களிப்பு மன்றத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளம் வீரர்களின் கவனச்சிதறலைக் குறைத்து, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, விளையாட்டு உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

Leave a Reply