• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை

இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி ஒன்றில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், மோதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் 21 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மோதல் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்றிருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோதலுக்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply