• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவுதி அரேபியாவில் 14 வருடங்களாக காணாமல் போயுள்ள இலங்கைப் பெண்

தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் கடந்த 14 வருடங்களாக காணாமல் போயுள்ளார்.

அம்பன்பொல - செருகொட பகுதியைச் சேர்ந்த நிலுகா ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று குறித்தப் பெண், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவுதி அரேபியா நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை ஆவணங்களில் இருந்து உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அவர் வெளிநாடுச் சென்றதில் இருந்து கடந்த 14 வருடங்களாக, அவர் எங்கே இருக்கின்றார் என்பது குறித்த எவ்வித தகவலும் வெளிவரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, காணாமல் போன பெண்ணின் குடும்பத்தார் பலமுறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணங்களின்படி, இந்த முறைப்பாடு 2022 ஆகஸ்ட் 17 அன்று, CD/183/2208 என்ற குறிப்பு எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பாக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் காணாமல் போன பெண்ணின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் குறித்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முதன்முறையாக முறைப்பாடு செய்தேன்.

தொடர்ந்து 2024ஆம் ஆண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தறி்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் பலமுறை சென்றுள்ளேன்.

இறுதியாக, தற்போதைய ஜனாதிபதிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதற்குப் பதிலளித்த அவர்கள், “இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

எனினும், இன்றுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்த விடயத்திற்காக பயணச் செலவுகள் உட்பட சுமார் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபா வரை செலவழித்திருக்கின்றேன். தற்போது எனக்கு எங்கும் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு 73 வயதாகின்றது. உடல்நலக் குறைவால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மருந்துகளை உட்கொண்டுதான் உயிர்வாழ்கின்றேன். எனது மனைவியும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் உரியவர்கள் விரைவாக கவனத்திற் கொண்டு தனது மகள் தொடர்பான தகவல்களை கண்டுபிடித்துத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Leave a Reply