• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் புதிய குடிவரவுத் திட்டம் - 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு

கனடா

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029ஆம் ஆண்டுகளுக்கான குடிவரவு மட்டத் திட்டம் ஆகியவற்றில் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) தகவலின்படி, இந்தத் திட்டம் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, தொழிலாளர் பிரிவின் கீழ் ஏற்கனவே கனடாவில் வசிக்கும் 1 இலட்சம் பேருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து, அந்தந்தப் பகுதிகளின் தொழிலாளர் தேவைகளுக்குப் பங்களிக்கக்கூடிய தகுதியுடைய பணியாளர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர்.

மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) கீழ் தகுதி பெறுவோரும் இதில் உள்ளடக்கப்படலாம். அத்துடன், அட்லாண்டிக் குடிவரவுத் திட்டம், புத்தொழில் நிறுவன விசா திட்டம், விவசாயம் மற்றும் உணவுத் துறை முன்னோடித் திட்டம் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணியாளர் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் குடிவரவுத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சிலரும் இதன்மூலம் பயனடையலாம்

மீதமுள்ள 1 இலட்சம் இடங்கள் மனிதாபிமான மற்றும் குடும்ப ஒன்றிணைப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இதில், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் தொடர்பான சில குடிவரவுத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தவர்கள், குடும்ப ஒன்றிணைப்புக்காக நீண்டகாலமாக நிரந்தர வதிவிடத்திற்காகக் காத்திருப்பவர்களும் அடங்குவர்.

Leave a Reply