சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்
இலங்கை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமையினால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்க ஏன் சந்தர்ப்பம் தர முடியாது? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
நிலையியல் கட்டளைகள் 29(1), (2) இன் கீழ் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து அதனை சபாநாயகரிடமும் பிரதி சபாநாயகரிடமும் கையளித்தேன். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கும், பிரேரணைகளை முன்வைப்பதற்குமான உரிமை தொடர்பாகவே இதனை முன்வைத்துள்ளேன். இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு எனக்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினையை சமர்ப்பிக்க வாய்ப்பையும் நேரத்தையும் கோரிய வேளை, காலை 9.15 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்திற்கு வருமாறு எனக்கு கூறப்பட்டது. இது வழமையான நடைமுறையே, என்றாலும், இதனைக் கையளிக்கும் நேரத்தில் சபாநாயகரும், பிரதிச் சபாநாயகரும் அவர்களினது அலுலக அறைகளில் இருக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினையைக் கையளிக்க நேரம் வழங்கப்பட்டிருந்தும் சபாநாயகர் அங்கு இருக்கவில்லை. எனவே இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க சந்தர்ப்பத்தைத் தாருங்கள். சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை சபாநாயகரே நிராகரித்ததனால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் குறித்தே இந்தப் பிரச்சினை முன்வைக்கப்படுகின்றது. இப்போதாவது இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்ப எனக்கு இடமளியுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சபாநாயகர் என்ற முறையில் நிலையியல் கட்டளைகளை மீறாதிருக்குமாறு பிரதிச் சபாநாயகரிடமும் கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சியின் வாய்களை மூட முயலாமல் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க எமக்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.





















