• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பாரிய கஞ்சா தோட்டம் - மூன்று பேர் கைது

கனடா

கனடாவின் மொண்ட்ரியால் நகருக்கு கிழக்கே உள்ள பல விவசாய நிலங்கள் மீது காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கான கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணக் காவல்துறையின் கடத்தல் தடுப்புப் பிரிவினர், அக்டன் பகுதி காவல்துறையின் உதவியுடன் கடந்த புதன்கிழமை இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இச்சோதனைகள் செயிண்ட்-தியோடர்-டி'அக்டன், டிரம்மென்ட்வில் மற்றும் துவா-ரிவியேர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டன.

கனடிய சுகாதார அமைப்பின் மருத்துவக் கஞ்சா உற்பத்திக்கான சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இயங்கி வந்த குற்றவியல் கும்பல் ஒன்றை இலக்கு வைத்து, இந்த கோடைக்காலத்தில் தொடங்கப்பட்ட புலனாய்வு விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

60-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் இணைந்து ஐந்து வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் மூன்று வாகனங்களில் நடத்திய சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

600-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், சுமார் 4,299 பவுண்ட் உலர்ந்த கஞ்சா மொட்டுகள், சுமார் 13 பவுண்ட் ஹாஷிஷ் போதைப்பொருள், சுமார் 480 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட 4 வாகனங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சோதனையின் போது 31 வயதுடைய ஒருவரும், 46 வயதுடைய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மீது கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், காவல்துறையின் குற்றவியல் தகவல் மையத்தை 1-800-659-4264 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 

Leave a Reply