• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்

அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.

பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.
 

Leave a Reply