• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் குழந்தையுடன் காரைத் திருடிய நபர் கைது

கனடா

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரில், நான்கு வயதுக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாலை, குவெல்ஃப் நகரின் 'வில்லோ ரோடு மற்றும் வெஸ்ட்வுட் ரோடு' சந்திப்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே இந்த சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

காரின் பின் இருக்கையில் நான்கு வயதுக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. மாலை 4:20 மணியளவில் காரை காணாததை உணர்ந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-க்கு அழைத்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து பொருட்கள் சிலவற்றைத் திருடிக்கொண்டு ஒரு நபர் வெளியே ஓடிவந்துள்ளார். அவரை அங்கிருந்த ஊழியர் தடுக்க முயன்றபோது, அந்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், அங்கிருந்த சொகுசு காரில் ஏறி வேகமாகத் தப்பியோடியுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கார் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட 16 நிமிடங்களிலேயே, அந்த வாகனம் அருகில் உள்ள ஒரு தெருவில் பொலிஸாரினால் கண்டறியப்பட்டது.

கார் மீட்கப்பட்டபோது, உள்ளே இருந்த குழந்தை எதையும் அறியாமல் இன்னும் தூங்கிக் கொண்டே இருந்தது. குழந்தைக்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரைத் திருடிச் சென்ற குவெல்ஃப் நகரைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் உடனடியாகக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை (Heat wave) வீசும் சூழலில் குழந்தைகளைக் காரில் தனியாக விட்டுச் செல்வதிலுள்ள ஆபத்து குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எந்தவொரு சூழ்நிலையிலும் குழந்தைகளையோ அல்லது வளர்ப்புப் பிராணிகளையோ மிகக் குறைந்த நேரத்திற்குக்கூடக் காரில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 
 

Leave a Reply