வெனிசுவேலா நிலநடுக்கம் - 32 மணி நேரத்திற்குப் பின் 18 நாள் குழந்தை உயிருடன் மீட்பு
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று சுமார் 32 மணி நேரங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பதிவான மிக அரிதான மற்றும் நெகிழ்ச்சியூட்டும் உயிர் பிழைப்புச் சம்பவங்களில் ஒன்றாக இந்த மீட்பு கருதப்படுகிறது.
நீண்ட நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த போதிலும், குழந்தைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை மீட்கப்பட்ட சுமார் 90 நிமிடங்களுக்குப் பின்னர், அதே இடத்திலிருந்து அதன் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தை தனது தந்தையுடன் மீண்டும் இணைந்த உணர்வுபூர்வமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
வெனிசுவேலாவில் கடந்த 24ஆம் திகதி அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 6.04 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.
வெறும் 39 வினாடி இடைவெளியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களில் முதலாவது 7.2 மெக்னிடியூட் அளவிலும், இரண்டாவது 7.5 மெக்னிடியூட் அளவிலும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடரால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குயிரா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, இந்த நிலநடுக்கங்களால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாதிப்பு தொடர்பான தரவுகள் மாற்றமடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் துயரத்தின் மத்தியில், 18 நாள் குழந்தையும் அதன் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.























