அதிகரிக்கப்படுமா பேருந்து கட்டணம் - அடுத்த சில நாட்களில் தீர்மானம்
இலங்கை
அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் இத்துறையில் உள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டி, ஜூலை 1 முதல் வருடாந்திர பேருந்து கட்டண மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் (NTC) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை ஜூன் 24 அன்று எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன கூறினார்.
முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணையத்துடனான கலந்துரையாடல்கள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் கட்டண மாற்றத்தை ஜூலை 5-ஆம் திகதி நடைமுறைப்படுத்த சங்கங்கள் முன்னதாகவே முன்மொழிந்திருந்தாலும், உறுப்புச் சங்கங்களுடனான கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் வழக்கமான திகதியான ஜூலை முதலாம் திகதியே அதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அச்சங்கங்கள் ஏற்கனவே தங்கள் செலவு விவரக் கணக்கீடுகளை தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும், ஜூலை மாதத்திற்கான கட்டண திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்து கட்டணத்திற்கான வருடாந்திர திருத்தமானது, பொதுவாக எரிபொருள் விலைகள் மற்றும் பிற செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொள்ளும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.





















