வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்
இலங்கை
புனித வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள் நாளை (மே 30) முதல் மே 31ஆம் திகதி வரை தடையின்றி இயக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வெசாக் பண்டிகை கால வழிபாடுகளுக்காகப் புனித நகரான அனுராதபுரத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை எளிதாக்கும் வகையில் விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மாத்தறை – திஹகொட பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மித்தெல்லவெல புராண ரஜமஹா விகாரையில் நடைபெறும் ‘அரச வெசாக் விழாவில்’ கலந்துகொள்ளும் பொதுமக்களின் வசதிக்காகவும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பண்டிகை காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஜனநெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்களது பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.























