இயேசு கிறிஸ்துவின் சிலையை உடைத்த இஸ்ரேலிய வீரர்கள் - இத்தாலிய அமைதிப்படையின் நெகிழ்ச்சியான செயல்
தெற்கு லெபனானில் உள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் டெபல் (Debel) கிராமத்தில், இயேசு கிறிஸ்துவின் சிலையினை இஸ்ரேலிய வீரர் ஒருவர் கோடரியால் சேதப்படுத்தும் காட்சி வெளியாகி உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரியதுடன், தொடர்புடைய வீரர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானுக்கான வத்திக்கான் தூதர் பேராயர் பாலோ போர்ஜியா தலைமையில் சென்ற இத்தாலிய அமைதிப்படை வீரர்கள், அக்கிராமத்திற்குப் புதிய இயேசு சிலையினைப் பரிசாக வழங்கினர்.
கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரினால் துண்டிக்கப்பட்டுள்ள டெபல் கிராம மக்கள், இந்த புதிய சிலையினைத் தேவாலய மணிகள் முழங்க கைதட்டல்களுடன் வரவேற்றனர்.
"மன்னித்தலே எமது மதம்" என்ற அடிப்படையில் இஸ்ரேலின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகவும், இந்தச் செயல் தங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் அந்தப் பங்குத்தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்த அமைதி முயற்சியைப் பாராட்டியுள்ளதுடன் இது "நம்பிக்கை மற்றும் உரையாடலின் வலிமையான செய்தி" என்றும் குறிப்பிட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.























