அமெரிக்காவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - 10 பேர் காயம்
அமெரிக்காவின் பேட்டன் ரூஜில் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததன்படி, குறித்த வணிக வளாகத்தின் உணவுக்கூடத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் வன்முறையாக மாறியுள்ளது.
இதன் போது, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நோக்கி துப்பாக்கியால் சூடு நடத்தினர். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டால் அங்கிருந்த பொதுமக்கள் பதற்றமடைந்து அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், குற்றச்சாட்டாளர்களை கைது செய்ய தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.























