குற்றவாளியும் நானே, நீதிபதியும் நானே
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் போர் இரண்டாவது மாதத்தைக் கடந்தும் தொடர்கிறது. ஈரான் அணுவாயுதம் உற்பத்தி செய்வதைத் தடுத்தல், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துதல், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்தல் என பல்வேறு காரணங்களைக் கூறியவாறு தாக்குதல்கள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகின்றது. ஈரானின் மீதான தாக்குதல்கள் உண்மையில் எதற்காக நடக்கின்றது என்பது உலக மாந்தரில் பலருக்கும் இன்னமும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. போரைத் தொடங்கி நடத்திவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்காவது உண்மைக் காரணம் தெரியுமா என்பது கூடக் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், அவர் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள், வழங்குகின்ற செவ்விகள், சமூக ஊடகத்தில் இடுகின்ற பதிவுகள் யாவையும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருந்து வருகின்றன.
ஈரானின் நேரடி அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஹேர்முஸ் நீரிணையைத் திறப்பதற்காக 48 மணி நேர அவகாசம் வழங்கியிருந்த ட்ரம்ப், அந்த அவகாசம் முடிவதற்கு முன்னதாகவே ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். ஈரானுடன் பேச்சுக்கள் நடப்பதாகவும், அந்தப் பேச்சுக்களில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு குறித்த அவகாசத்தை தான் வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், அத்தகைய பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்வரை பேச்சுக்களுக்கு செல்லப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
16 அம்சங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஈரான் தரப்பு தான் முன்வைத்துள்ள மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நிற்கிறது. அது மாத்திரமன்றி, தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் போர் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்தபடி ஈரான் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து எழாமல் போனதும், மாறாக அரசாங்கத்துக்குத் தங்கள் பேராதரவை வழங்கி வருவதும் போரை ஆரம்பித்த இரண்டு நாடுகளும் எதிர்பாராத விடயம். அது மாத்திரமன்றி, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா படை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கிய மேற்குலக நாடுகள் ஈரான் விவகாரத்தில் விலகி இருப்பதுவும் அமெரிக்கா எதிர்பாராத மற்றொரு நகர்வாக உள்ளது.
உலக அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்துவதை எதிர்பார்த்துக் காத்திருந்த ட்ரம்ப், நெத்தான்யாஹு ஆகியோர், தாமே தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதை உணரத் தொடங்கியுள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்களை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என மேற்குலக நாடுகளிடம் இருந்து எழும் குரல்கள் இந்த இருவருக்கும் நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது புரிகிறது. அதேவேளை, ட்ரம்புக்கு எதிராக உள்நாட்டிலும் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
தற்போதைய மோதல்களின் போக்கு உலகளாவிய அடிப்படையில் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்வதற்குக் காரணமாக இருப்பது போக நீண்டகால சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. ஈரானில் உள்ள அணு உலைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், பதிலுக்கு இஸ்ரேலின் அணுசக்தித் துறை இலக்கு வைக்கப்படுவது, பெற்றோலியம் மற்றும் எரிவாயு வயல்கள் தாக்குதலுக்கு உள்ளாதல் என்பவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அந்தந்த நாடுகளோடு மாத்திரம் மட்டுப்பட்டு நின்றுவிடப் போவதில்லை. மாறாக, அது பூகோள சூழலியல் சமநிலையையே பாதிக்கக்கூடிய அபாயம் நிறைந்தவை.
போர்களின் நடுவே ஏற்படும் தற்காலிக மோதல் தவிர்ப்புகள் நிரந்தர சமாதானத்துக்கு உதவுவதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். இத்தகைய தற்காலிக போர் ஓய்வுகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்குக் கிட்டிய எடுத்துக்காட்டாக உக்ரைன் போர் உள்ளது. பல தடவைகள் மோதல் தவிர்ப்பு அறிவிப்புகள் வெளியான போதிலும், பேச்சுக்கள் நடைபெற்ற போதிலும் உக்ரைனில் போர் இன்னமும் தொடர்ந்த வண்ணமேயே உள்ளது. கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொள்ளும் ரஸ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. கிட்டத்தட்ட ரஸ்யாவின் அணுகுமுறையையே ஈரானும் பின்பற்றுவது போன்று தெரிகின்றது. அமெரிக்கா முன்மொழியும் தற்காலிக போர் நிறுத்தம் எதனையும் தான் கணக்கில் கொள்ளப் போவதில்லை என்பதே ஈரானின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
மறுபுறம், தற்காலிக போர் ஓய்வை அறிவித்துள்ள அமெரிக்கா, தன்னை மேலும் தயார்படுத்திக் கொண்டு எதிர்வரும் நாட்களில் தரை மார்க்கமாக நகர்வுகளை மேற்கொண்டு ஈரானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சிலவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஈடுபட இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்காவில் உள்ள செல்வாக்குமிக்க யூத இனத்தவர்களுமே காரணம் என்ற தகவல் ஒன்று ஊடகங்களில் உலா வருகின்றது. இந்தத் தகவலில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், ஹேர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அமெரிக்கா நெடுநாளாகவே கொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமான உண்மை. தற்போதைய நிலையில் அமெரிக்காவின் எண்ணத்துக்குக் குறுக்கே நிற்பது ஈரானில் உள்ள ஆட்சியாளர்களே. தற்போதைய ஆட்சியாளர்களை அகற்றிவிட்டு தமக்குச் சாதகமாக நடக்கக் கூடியவர்களை ஆட்சிபீடத்தில் அமரச் செய்துவிட்டால் அவர்களைத் தம் விருப்பப்படி ஆட்டி வைக்கலாம் என அமெரிக்க ஆட்சியாளர்களும், பெரு வணிகர்களும் நினைக்கிறார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்தவொரு விலையையும் செலுத்துவதற்கும் அவர்கள் தயராக உள்ளனர்.
போர்கள் எந்த வடிவத்தில் நடந்தாலும், எந்தவொரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை யதார்த்தத்தில் மானுடத்துக்கு விரோதமானவையே. அதிலும் எந்தவொரு ஆத்திரமூட்டலும் இல்லாமல் தொடுக்கப்படும் போர்கள் முழுக்க முழுக்க சட்ட விரோதமானவை, குற்றவியல் தன்மை கொண்டவை. அத்தகைய போர்களைத் தொடங்குவோர் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் நாஸிக்களுக்கு எதிராக நடைபெற்ற நூரம்பேர்க் விசாரணைகளுக்குத் தலைமை தாங்கிய அமெரிக்க நீதிபதி ரொபர்ட் எச்.ஜக்சன் தனது தொடக்கவுரையின் போது இந்த விடயத்தை நன்கு தெளிவுபடுத்தி இருந்தார். அவரின் கூற்றின் பிரகாரம் போர் முதலில் சமாதானத்தைக் கொல்கிறது. ஆகவே அது ஒரு குற்றச் செயலாக ஆகி விடுகிறது. குற்றத்தைப் புரிந்தவர் குற்றவாளி. எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.
ஈரான் மீதான தாக்குதலை - எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றி - ஆரம்பித்து வைத்தவர்கள் ட்ரம்ப் மற்றும் நெத்தன்யாஹு ஆகியோர். இந்த விடயத்தில் அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என நன்கு தெரிந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்கும் வல்லமை தற்போதைய உலகில் யாருக்கு இருக்கிறது என்பதே பெறுமதியான கேள்வி.
சுவிசிலிருந்து சண் தவராஜா






















