வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறள் மணிகள் 200 - நூலின் அறிமுக விழா
கனடா
ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் எழுதப்பெற்ற நூலின் அறிமுக விழா ரொறன்ரோ, கனடாவில் ஏப்பிரல் 5ஆம்திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
காரை.இந்துவின் ஓய்வுநிலை அதிபரான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் எழுதப்பெற்ற 'வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறள் மணிகள் 200' என்னும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் ஏப்பிரல் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் ஈழத்திலிருந்து வருகைதந்துள்ள 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' 'தமிழருவி' த.சிவகுமாரன் நயப்புரையினை வழங்கவிருப்பது சிறப்பானதாகும்.
நூலாசிரியர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் யாழ்ற்ரன் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் மகா வித்தியாலயம், காரை.இந்து ஆகிய பாடசாலைகளில் ஆசிரியப் பணியாற்றி வர்த்தகம், தமிழ், சமயம் ஆகிய பாடங்களை போதித்து வந்தவர். காரை.இந்துவில் ஏழு ஆண்டுகள் உப-அதிபராகவும் எட்டு ஆண்டுகள் அதிபராகவும் பணியாற்றி இப்பாடசாலையினை உயர்நிலைக்கு கொண்டுவர அயராது உழைத்தவர். இவரது பதவிக்காலம் காரைநகரின் இடப்பெயர்வின் பின்னர் மீளக் குடியேறிய கடினமான காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும். கல்விப் பணியில் 35 ஆண்டுகள் சேவையாற்றி பல நல்மாணாக்கர்களை உருவாக்கியவர். சமய, சமூக உணர்வாளரான இவர் காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து ஆன்மீகப் பணியிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டு செயலாற்றி வருபவர். இவரது சைவத் தமிழ்ப் பணியினை கௌரவித்து தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் 'சிவத்தமிழ்' என்ற விருதினையும் ஸ்ரீலங்கா கலாசார அலுவல்கள் திணைக்களம் 'கலாபூசணம்' என்ற விருதினையும் வழங்கி பாராட்டியிருந்தன. பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்கள் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய அளப்பரிய பங்கினை கௌரவிக்குமுகமாக யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்
துறை 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டியிருந்தமையும் பெருமைக்குரியதாகும்.
சாதாரண மக்களையும் சென்றடையக்கூடியவகையில் எளிமையான விளக்க உரையுடன் கூடிய பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற 'வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறள் மணிகள் 200' என்ற நூலானது காரைநகர் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சிறந்த மேடைப் பேச்சாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமாகிய ந.கணேசமூர்த்தி அவர்கள் நூலின் விமர்சன உரையினை சிறப்புற நிகழ்த்தியிருந்தார். இதேவேளை நூலின் அறிமுக நிகழ்வு பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டிருந்த பொங்கல் விழாவின் இடையே இச்சங்கத்தின் ஆதரவில் நடைபெற்றபோது பிரபல ஊடகவியலாளரான திரு. இளைதம்பி தயானந்தா நூலாய்வுரையினை நிகழ்த்தியிருந்தார்.
திருக்குறள் நூல் தொடர்பில் 'தமிழருவி' சிவகுமாரன் அவர்கள் அண்மையில் ஆற்றியிருந்த உரையினை தமிழக அறிஞர்கள் பலர் வியந்து பாராட்டியிருந்தமை அறியக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் குறித்த நூலின் நயப்புரையினை சிவகுமாரன் நிகழ்த்தவிருப்பது இலக்கிய ஆர்வலர்களாலும் காரைநகர் மக்களாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு நோக்கப்படுகிறது.






















