• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடிவேலு காமெடியால் நடந்த மெடிக்கல் மிராக்கிள்... கோமாவில் இருந்த சிறுமி மீண்டெழுந்த அதிசயம்..!

சினிமா

நடிகர் வடிவேலுவின் காமெடியைக் கேட்டு ஒரு சிறுமி கோமாவில் இருந்து மீண்டிருக்கிறார். அதேபோல் ஒரு பெண் தற்கொலை முடிவை கைவிட்டிருக்கிறார்.

அதைப்பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அவரின் காமெடியால் மனம்விட்டு சிரித்தவர்கள் ஏராளம். அதே நேரத்தில் அவரின் காமெடி சிலரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம் நிஜத்தில் வடிவேலுவின் காமெடி சிலரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. அந்த சம்பவங்களை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அவர் சொன்ன முதல் சம்பவம் ஒரு 11 வயது சிறுமியை பற்றியது. அந்த குழந்தை கோமா நிலையில் இருந்தபோது, மருத்துவர்கள் பெற்றோரிடம் "இந்த குழந்தைக்கு அதிகம் பிடித்த விஷயம் என்ன?" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பெற்றோர், "எங்கள் மகளுக்கு வடிவேலு காமெடி என்றால் உயிர்" என்று கூறியுள்ளனர்.

உடனே மருத்துவர், அவளுக்கு பிடித்த நகைச்சுவை காட்சிகளை போட்டு காட்டுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பெற்றோரும் வடிவேலுவின் காமெடி காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பியுள்ளனர். அந்த காட்சிகளை பார்த்தபோது குழந்தை மெதுவாக கோமா நிலையிலிருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியும், அவளது பெற்றோரும் நேரில் வந்து வடிவேலுவுக்கு நன்றி தெரிவித்த போது, "இதைவிட ஒரு கலைஞனுக்கு வேற என்ன வேண்டும்?" என்று நெகிழ்ச்சியடைந்தாராம் வடிவேலு.

இதேபோல், அவர் பகிர்ந்த இன்னொரு சம்பவம் இன்னும் ஆச்சரியமானது. தேனி மாவட்டத்தில், கணவன் திட்டியதால் மனம் உடைந்து, ஒரு பெண் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். தூக்குப்போட முயன்ற நேரத்தில், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கையில் கயிறு இருக்க, டிவி முன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாராம் அந்த பெண்.

போலீஸ் வந்து என்ன நடந்தது என்று கேட்டபோது, "சாகலாம் என்று பார்த்தேன்… இந்த வடிவேலு வந்து கெடுத்துட்டாரு" என்று நகைச்சுவையாக சொன்னாராம். காரணம், தற்கொலை செய்ய நினைத்த அதே நேரத்தில் டிவியில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருந்ததாம். அதை பார்த்ததும் மனம் மாறி, அந்த முடிவை கைவிட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேட்ட போலீஸ் அதிகாரி, வடிவேலுவின் போன் நம்பரை வாங்கி அவரை தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லியிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணுடனும் வடிவேலு நேரடியாக பேச, "கொஞ்ச நேரம் முன்னாடி செத்துருப்பேன் சார்… நீங்க தான் வந்து காப்பாத்திட்டீங்க" என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். அதற்கு வடிவேலு, இனிமேல் இப்படியான எண்ணங்கள் வரக்கூடாது என்று அன்போடு அறிவுரை கூறியுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களும், நகைச்சுவை என்பது சிரிப்புக்கு மட்டும் அல்ல… சில நேரங்களில் உயிரையும் காக்கும் வலிமை கொண்டது என்பதை உணர்த்துகின்றன. வடிவேலுவின் காமெடி, திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்களின் மனதை மாற்றிய தருணங்களாக இவை இன்று பேசப்பட்டு வருகின்றன 

Chennai FootPrints

Leave a Reply