உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
சினிமா
" என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்."
" எப்படிச் சொல்கிறீர்கள்? "
" குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள் என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாக சொல்கிறேன். என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டா
இருப்பார்? "
" பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா? "
" பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். "
" அப்படிப்பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது ? "
" கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்கமுடியாது. ஆனால், அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை. "
- விகடன் பொக்கிஷம் , எம்ஜிஆர் பேட்டியிலிருந்து






















