• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு

இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche) மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது.

இதன்போது, ‘டித்வா’ பேரிடரின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கிக் கூறிய கூட்டிணைவு குறிப்பாக, அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பாரபட்ச நிலைமை குறித்தும் விளக்கிக் கூறியது.

அதேபோல, பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடு மற்றும் காணி வழங்கும் விடயத்தில் தெளிவில்லாத கொள்கை, சேதமடைந்துள்ள உள்கட்டுமானங்களை திருத்துவதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதம், அதனால் கல்வியின் மீது ஏற்பட்டுள்ள தாக்கம், மீள்கட்டுமானத்தின்போது பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்தும் மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தது.

உறுதியுடன் கூடிய காணி, தனி வீடு, புதிய கிராமங்களாக ஒன்றிணைப்பதே இதற்கான ஒரே தீர்வு என்றும் கூட்டிணைவு வலியுறுத்திக் கூறியது.

அரச உயர்மட்டத்தினரைச் சந்திக்கும்போது இது குறித்து தான் எடுத்துரைப்பதாகவும் கள நிலவரம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மலையகத்துக்கு விஜயம் செய்யுமாறு கூட்டிணைவு அழைப்பு விடுத்தபோது, எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வ கள விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறினர்.
 

Leave a Reply