சிவாஜி வீட்டுக்கு நான் போகணும்! - அமிதாப் பச்சன் பகிர்ந்த நெகிழ்ச்சியான ரகசியங்கள்!
சினிமா
மும்பைக்கு அருகிலுள்ள ‘மட்’ (எனும் எழில்மிகு தீவில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பு. அங்கே திரையுலகின் இரு பெரும் ஆளுமைகள் சந்தித்தனர். ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மற்றொருவர் நம்ம ஊர் இளையதிலகம் பிரபு. அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் அமிதாப் பச்சன் மனம் திறந்து இளையதிலகம் பிரபுவிடம் பேசினார் .
அவற்றில் சில இவை :
எகிப்தியன் மாதிரி ஒரு பையன்: நடிகர் திலகத்தின் தீர்க்கதரிசனம்...
அமிதாப் பச்சனைப் பார்த்ததும் பிரபுவுக்குத் தன் தந்தை சொன்ன ஒரு பழைய நினைவு சட்டென வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமிதாப் பச்சனை ஒரு சூட்டிங்கில் பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், "இன்னைக்கு ஒரு பையனைப் பார்த்தேன்டா... நல்ல உயரம், எகிப்தியன் மாதிரி இருக்கான்... கண்டிப்பா இவன் ஒரு நாள் பெரிய சூப்பர் ஸ்டாரா வருவான் பாரு" என்று கணித்தாராம்.
இதை பிரபு அமிதாப்பிடம் சொன்னபோது, அவர் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. "நானும் உங்க அப்பா மேக்கப் போடும்போது அவருக்குப் பின்னாடி போய் நின்னு, அவர் பண்ற அந்த மேஜிக்கை ரசிச்சிருக்கேன்" என்று கூறி, தான் ஒரு சிவாஜி ரசிகன் என்பதை அமிதாப் பெருமையுடன் வெளிப்படுத்தினார்.
அமிதாப்புக்கு பிடித்த நடிகை சாவித்திரி!
உரையாடல் தொடர்ந்தபோது அமிதாப் பச்சன் ஒரு ஆச்சரியமான ரகசியத்தைப் பகிர்ந்தார். அவருக்குப் பிடித்த நடிகை யார் என்று பிரபு கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் 'நடிகையர் திலகம்' சாவித்திரி என்று பதிலளித்தாராம். அமிதாப் போன்ற ஒரு உலகளாவிய கலைஞர், தமிழ் சினிமாவின் மேதைகளை இவ்வளவு துல்லியமாக நினைவில் வைத்திருப்பதைச் சொல்லி பிரபு இன்றும் வியக்கிறார்.
“உங்க அப்பா கேரக்டரை யாராலும் பண்ண முடியாது”...
பிரபு நடித்த 'அக்னி நட்சத்திரம்' படத்தை அமிதாப் பச்சன் இன்னும் மறக்காமல் நினைவு வைத்து பிரபு நடிப்பை பாராட்டினார். "தம்பி, உங்கள் ஒரு படத்தின் ரீமேக்கில் நான் நடித்திருக்கிறேன்" என்று உரிமையோடு சொன்னவர், "ஆனாலும் உங்கள் அப்பா நடித்த கதாபாத்திரங்களை யாராலும் ஈடு செய்ய முடியாது" என்று சிவாஜியின் நடிப்புத் திறமைக்குத் தலைவணங்கினார்.
சென்னையில் பாக்கி இருக்கும் அந்த ஒரு வேலை!
"சென்னையில் எனக்கு ஒரு வேலை பெண்டிங் இருக்கு, அடுத்த முறை வரும்போது அதை நிறைவேற்றணும்" என்று அமிதாப் ஒரு பெரிய சஸ்பென்ஸ் கொடுத்திருக்கிறார். பிரபு பதற்றத்துடன், "சொல்லுங்க சார், நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?" என்று கேட்க, அமிதாப் சிரித்துக் கொண்டே சொன்ன அந்த பதில் இதயத்தைத் தொடுவதாக இருந்தது:
"வேற ஒண்ணுமில்லை பிரபு... உங்க வீட்டுக்கு வந்து எல்லாரையும் பார்க்கணும். ரொம்ப நாள் ஆச்சு, அதுதான் அந்த வேலை!"
அந்த கலைஞனின் இந்த எளிமையும், சிவாஜி குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் பேரன்பும் அந்தப் படப்பிடிப்புத் தளத்தையே நெகிழச் செய்திருக்கிறது.
Senthilvel Sivaraj






















