பெண்ணுக்குப் பெண்ணே செய்த கொடுமை - 25 ஆண்டுகள் நரகத்தை அனுபவித்த இளம்பெண்
இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியில், கற்றல் குறைபாடுடைய ஒரு பெண்ணை சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைபிடித்து, தனது வீட்டு பணிப்பெண்ணாகவும் அடிமையாகவும் நடத்திய 56 வயது பெண்ணை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 1996 ஆம் ஆண்டு, அவருக்கு 16 வயதாக இருந்தபோது, அவரது குடும்பத்தினர் மேண்டி விக்சன் (Mandy Wixon) என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். அன்றிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகள் அவர் அந்த வீட்டிலேயே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு மேண்டி விக்சனின் மகன்களில் ஒருவரே இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்ற விசாரணையில் அந்தப் பெண் அனுபவித்த சித்திரவதைகள் குறித்துக் காவல்துறையினர் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பற்கள் உடைந்தன.அவரது முகத்தில் பிளீச் (Bleach) ஊற்றப்பட்டுள்ளது.
மேலும், பாத்திரம் கழுவும் திரவத்தைக் கட்டாயப்படுத்தி அவரது தொண்டையில் ஊற்றியுள்ளனர்.
நாள் முழுவதும் தரையை முழங்காலிட்டு துடைக்க வைக்கப்பட்டதால், அவரது கால்களில் பெரிய தழும்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்குச் சரியான உணவு வழங்கப்படாமல், மிஞ்சிய உணவுகளே வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ உதவியோ அல்லது சரியான பராமரிப்போ இன்றி அந்தப் பெண் பல ஆண்டுகளாகப் பல் வலியால் அவதியுற்றுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இயன் லோரன்ஸ், "இந்தக் கதையைக் கேட்கும்போது ஒரு பழைய காலத்து இருண்ட நாவலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.
தவறான முறையில் சிறைவைத்தல், ஒருவரை அடிமையாக வேலை செய்ய கட்டாயப்படுத்துதல் மற்றும் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேண்டி விக்சன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் தற்போது பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் இப்போது கல்லூரிக்குச் செல்வதாகவும், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாகத் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேண்டி விக்சனுக்கான தண்டனை விபரங்கள் எதிர்வரும் மார்ச் 12 அன்று அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.























