மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு
இலங்கை
மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி (GSP+)வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என பிரான்ஸ் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
டித்வா புயல் அனர்த்தத்துக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் தொடர்பான அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக வெளிப்படையான பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி யின்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடு கட்டல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் ரூபா 50 இலட்சம் செலவில் அரசாங்கம் வீடுகளை கட்டி வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ள நிலையில், இந்த சலுகை அனுராதபுர மாவட்டத்துடன் மட்டுமல்லாது, கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை எதிர்கொண்ட மலையக தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் விலக்கி வைக்கப்படுவதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
இந்த இரட்டை நிலை அரசாங்க அணுகுமுறைகள் குறித்து தானும் தனது குழுவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடம் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மனோ கணேசன் எம்பி தலைமையிலான த.மு.கூ பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்து கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பில் த.மு.கூ பிரமுகர்களான பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில், மனோ கணேசன் தனது எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், டித்வா பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்கள், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரசின் மீள்-கட்டெழுப்பல் வீடமைப்பு திட்டத்திலிருந்து திட்டமிட்ட முறையில் விலக்கப்பட்டுவருவதாக உண்மை ஆதாரங்களுடன் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கமளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூபா 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும் பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்படுவது கவனயீனம் அல்ல, திட்டமிட்ட பாகுபாடு என அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், மலையக சமூகத்துக்கே உரிய இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகள் சார்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அவை திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள் மற்றும் சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கொண்டுள்ள தனது நல்லுறவுகளை பிரான்ஸ் பயன்படுத்த வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி உறுப்பு நாடான பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி மற்றும் வீட்டு உரிமைகளை, இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜீஎஸ்பி+ (GSP+) வரிச்சலுகைகளுக்கான முக்கிய நிபந்தனைகளாக முன்வைக்க வேண்டும் எனவும் த.மு.கூ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.























