நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவைத் துரித்தப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
இலங்கை
வன்னிப்பிராந்தியம் உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து முன்னெடும்முமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 20.01.2026இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
விரைந்து நெல்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளிடம் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்திலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பாகங்களிலும் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக நெற்செய்கையின் அறுவடை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அரசினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எமது விவசாயிகள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்.
நெற்கொள்வனவிலும் தாமதம் ஏற்பட்டால் விவசாயிகள் தனியார் நெல் கொள்வனவாளர்களிடமும், இடைத் தரகர்களிடமும் நெல்லினை குறைந்த விலைக்கு வழங்கி நட்டமடையும் நிலை ஏற்படும்.
வன்னி உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள விவசாயிகள் இம்முறை வெள்ள அனர்த்தத்தினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.
எனவே விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விரைந்து முன்னெடுக்குமாறு இவ் உயரிய சபையினைக் கோருகின்றேன் – என்றார்.























