முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு
இலங்கை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டன.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பதாக உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சதொச நிறுவனம் ஊடாக 14,000 கரம்போர்டுகள் மற்றும் 11,000 தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அந்தத் தண்டனைக்கு எதிராக இவர்கள் இந்த மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.






















