கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்
இலங்கை
உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி தாமதமான மேலும் சுமார் 700 உப்பு கொள்கலன்கள் சுங்கப்பிரிவின் சில இடங்களில் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, உப்பு இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறக்குமதியாளர்களால் உப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட உப்புக் கொள்கலன்களே தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிடுகையில், உப்பு இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படியே தாம் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
தேங்கியுள்ள கொள்கலன்களை மீண்டும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, உப்பு இறக்குமதி செய்த நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
இதேவேளை துறைமுக அதிகாரசபையின் தலைவர் சிறிமெவன் ரணசிங்க குறிப்பிடுகையில் இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்தச் சேவைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, குறைந்த அபாயம் கொண்ட கொள்கலன்களை புளுமெண்டல் முனையத்திற்கு அனுப்பி, சுங்கத் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் விடுவிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.






















