• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் 16,500 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியீடு

ஈரானில் இதுவரை போராட்டத்தில் சிக்கி 16,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புது அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தி சண்டே டைம்ஸ் இதழ் (பிரிட்டிஷ் பத்திரிக்கை) பெற்றுள்ள, அங்குள்ள மருத்துவர்களின் புதிய அறிக்கையின்படி, ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் குறைந்தது 16,500 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஈரானில் உள்ள எட்டு முக்கிய கண் மருத்துவமனைகள் மற்றும் 16 அவசர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த தகவல்களின்படி, குறைந்தது 16,500 முதல் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,30,000 முதல் 3,60,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.

குறைந்தது 700 முதல் 1,000 பேர் வரை கண்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையான நூர் கிளினிக்கில் 7,000 கண் காயங்கள் பதிவாகியுள்ளன. இரத்தப் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்களே நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இரத்தத்தை கொடுத்துள்ளனர்.

ஈரான் அரசு விதித்துள்ள இணைய முடக்கத்தை தாண்டி, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் செய்தித்தாளிற்குப் பேட்டியளித்துள்ளனர். ஆனால் இதுவரை 2,885 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 3,090 மரணங்கள், மேலும், 22,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதே அதிகாரப்பூர்வ தகவலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 
 

Leave a Reply