• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று (18) இந்தியா பயணமாகியுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா செல்கிறது.

இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த செயலமர்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பரிந்துரையின் கீழ், இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக அமைகிறது.

உள்ளூராட்சி நிர்வாகத் திறன்களை மேம்படுத்துதல், மக்கள் சேவை செயல்திறன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடைமுறை முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இச்செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 15 உறுப்பினர்களும், பதுளை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும், மாத்தளை மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினரும், கண்டி மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு(2025) ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி, நுவரெலியாவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் அவர்கள், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 20 உறுப்பினர்களுக்கு பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அந்த உறுதியளிப்பிற்கிணங்க, இப்போது இ.தொ.கா சார்பில் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தப் பயிற்சி செயலமர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

Leave a Reply