பல வருடங்களாக மனைவிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை
தனது மனைவிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, படம்பிடித்து, அவற்றை இணையத்தில் வெளியிட்டதற்காக ஜேர்மன் நீதிமன்றத்தால் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெர்னாண்டோ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபருக்கு ஜேர்மனியின் ஆச்சென் நகரில் உள்ள ஒரு நீதிமன்றம் எட்டரை வருடங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மோசமான வன்கொடுமை, கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் தனிப்பட்ட தனியுரிமையை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட நிலையிலேயே, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 61 வயதாகும் ஸ்பெயின் நாட்டவரான பெர்னாண்டோ, 2018 முதல் 2024 வரையிலான பல ஆண்டுகளாக, தனது வீட்டில் மனைவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கதரினா எஃபெர்ட் கூறுகையில், அந்த நபர் அந்தத் துன்புறுத்தலை காணொளியாகப் பதிவு செய்து, அதை இணையத்திலும் பகிர்ந்துகொண்டார் என்றார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, விசாரணையின் பெரும்பகுதி இரகசியமாக, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்டது.
மேலும், விசாரணையின்போது அவரால் சாட்சியமளிக்க முடிந்தது, தனது உணர்வுகளையும் தன்னைச் சுமையாக அழுத்திய அனைத்தையும் வெளிப்படுத்த முடிந்தது என குறித்த பெண்ணின் சட்டத்தரணி பதிவு செய்துள்ளார்.
நடந்தவற்றுக்கு இந்தத் தீர்ப்பு ஈடுசெய்யாது என்றாலும், விடயங்களைச் சமாளிப்பதற்கும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் இது ஓரளவுக்கு உதவக்கூடும் என்றே சட்டத்தரணி நிக்கோல் செர்வாட்டி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கானது, கடந்த ஆண்டு பிரான்சில் டொமினிக் பெலிகோட் சம்பந்தப்பட்ட பரபரப்பான வழக்குடன் பல ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெலிகோட் தனது மனைவி ஜிசெலுக்கு ரகசியமாக போதைப்பொருள் கொடுத்து, அவர் சுயநினைவின்றி இருந்தபோது பல ஆண்களை அழைத்து அவரை வன்கொடுமை செய்ய அனுமதித்த குற்றத்திற்காகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






















