வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது.
அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 276 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4547 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அரச மற்றும் அரச சாப்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், இன்றைய தினம் திங்கட்கிழமை ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட இணையவழியாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் நிலைவரம் குறித்து ஜனாதிபதிக்கு ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளமை, பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோக நடவடிக்கைகள் இன்னும் வழமைக்குத் திரும்பாதமை, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகள் என கூறினார்.
அதனை அடுத்து, ஜனாதிபதி, உடனடியாகச் சீர்செய்யப்பட வேண்டிய அவசர விடயங்களைப் பட்டியலிட்டு, ஒரு மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஐந்து அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக, மாகாண ரீதியான முழுமையான பாதிப்பு விவரங்களைத் தொகுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
























