• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு மாதத்தில் புதிய அறிவிப்பு... அஜித் சொன்ன பல தகவல்கள்

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

''நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ் பேச தெரியாது. தமிழை கற்றுக்கொண்டு பேச கடுமையாக உழைத்தேன். அந்த போராட்டம் பெரியது. வந்த புதிதில் உன் பெயர் பிரபலமான பெயர் போல இல்லையே... பெயரை மாற்றுப்பா... என்றார்கள். ஆனால் சினிமாவுக்காக என் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. எனவே வேறு பெயரை சூட்டவில்லை.

நான் அடைந்த வெற்றிகள் எளிதாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பின்னரே அவை சாத்தியமானது. சவால்களைத் தாண்டி பயணிக்கும் நான், இன்றைக்கும் கார் ரேசிங்கில் 19 வயது வாலிபராக உழைக்கிறேன். கவனம் செலுத்துகிறேன்.

ஹாலிவுட் நடிகர் பிராட்பிட் நடித்த 'எப்.1' படம் போல இந்தியாவில் புதிய படமோ அல்லது அதன் ரீமேக்கோ உருவாக்கப்பட்டால் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எந்த வகையிலாவது இந்த விளையாட்டை பிரபலப்படுத்த முடிந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தானே...

அறிவும், விழிப்புணர்வும் தான் கார் ரேசின் அடிப்படை. கார் ரேசில் சில விபத்துகளைச் சந்தித்தேன். காயங்கள் இருந்தாலும் ரேசை நல்லபடியாக முடிக்கவே என் மனம் நாடும். அந்தவகையில் பந்தயத்தில் இருந்து விலகும் அளவுக்கு எனக்கு காயங்கள் ஏற்பட்டதில்லை. அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கார் பந்தய வீரர்கள் காயங்களையும், விபத்துகளையும் எதிர்கொள்வது வழக்கம்தான். நான் 29 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் நடிகன் என்பதால் அது பெரியளவில் பேசப்படுகிறது.

பொருளாதார ரீதியில் நாம் முன்னேறும்போது தான் சில திட்டமிடல்கள் சாத்தியமாகும். தருபவரா, பெறுபவரா? என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் செல்வம் சில நேரங்களில் நம்மை ராட்சசனாக மாற்றிவிடும். வெற்றி என்பது காட்டுக்குதிரை. யாரும் அதில் ஏறலாம். ஆனால் அந்த குதிரையை அடக்க முடியாவிட்டால், அது உன்னை கீழே தள்ளிவிடும்.

இப்போதில் இருந்து வருகிற மார்ச் மாதம் வரை கார் ரேசில் பிசியாக இருக்கிறேன். எனவே இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ள முடியாது என்றாலும், எனது புதிய படத்தின் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும்.

எனது இத்தனை ஆண்டு பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் மனைவி ஷாலினி, என் பிள்ளைகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் புதிய படம் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply