கரீபியன் நாடுகளை புரட்டிப் போட்ட மெலிசா புயல் - 49 பேர் பலி
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன.
இந்நிலையில் கரீபியன் தீவுகளைத் தாக்கிய சக்திவாய்ந்த மெலிசா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மெலிசா புயல் ஹைட்டி மற்றும் ஜமைக்காவைத் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி சென்று சேர்ந்ததில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் பல நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஹைட்டியில் நதியின் கரைகள் நிரம்பி வழிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் 120க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு இடம்பெயந்தனர்.
ஜமைக்காவின் சில கிராமங்களில் அனைத்து கட்டிடங்களும் சூறாவளியால் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
புயலால் 52 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கியூபாவிலும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மெலிசா புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






















