• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த மூவரும் இல்லை என்றால் கவிஞர் வாலி இல்லை

சினிமா

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தில்
மூன்று முக்கியமான பெயர்களைச்
சொல்ல வேண்டியது இருக்கிறது.
சுல்தான்
சுனைதா பேகம்
இப்ராஹிம்
இந்த மூவரும் இல்லை என்றால்
கவிஞர் வாலி இல்லை.
இதோ, வாலியின் வார்த்தைகளில் :
"சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி.
அவ்வப்போது கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து,
'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் இதுக்கான காசை உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று
சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’ திரு.சுல்தான் அவர்கள்!
பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் மனைவி, மகனோடு.
சினிமா வருமானம்தானே!
முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர்
அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.
அதையெல்லாம் விடுங்கள் !
என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே
என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் நினைவழிக்கும் கொடிய நோய் அது!
இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்?
அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை.
இந்த நிலையில் என் தந்தையுடன் பணி புரிந்த இப்ராஹிம் என்பவரின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்து இருந்தார். அந்த இஸ்லாமிய மாதுதான் ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள்.
இன்று நான் முத்தமிழ்ப் பாலருந்த மூலகாரணம் முஸ்லீம் பால்தான்!
இப்படி என் வாழ்வு வடிவு பெற

உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம்
முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் !”
(“நினைவு நாடாக்கள்” – வாலியின் அனுபவங்கள் )
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே !
கவிஞர் வாலி
(29 அக்டோபர் 1931 - 18 ஜூலை 2013)

 

John Durai Asir Chelliah

Leave a Reply