நாடோடி மன்னன் வெற்றி குறித்து எம்.ஜி.ஆர்
சினிமா
படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?…
பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப…நட்சத்திரங்கள் பணம் சேர்க்க….
சிலர் புகழ்பெற…..இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,
மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,
மக்களை ஒன்றுபடுத்த,
நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!
இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.
இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு…..
?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு….
இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.
இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ஏழை முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.
இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் நாடோடி மன்னன் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்….(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.
மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நாடோடி மன்னன் மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி! நமது இனத்தின் வெற்றி! இன்பத் திராவிடத்தின் வெற்றி….என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன்.
வணக்கம், வாழ்க திராவிடம் !
நன்றி !






















