லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
கடைசியாக ராஜ்குமார் ராவ் உடன் 'புல் சுக் மாப்' என்ற இந்தி படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். பாலிவுட் ரசிகர்களிடையே crush ஆக விளங்கி வரும் வாமிகா லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.






















