நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில்
இலங்கை
நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மேல் மாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளுக்காக ‘ஸ்கைலிஃப்ட்’ (Skylift) வாகனங்கள் இரண்டும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து காரணமாக வெளியேறும் வாயில்கள் தடைப்பட்டுள்ளதால், இந்த ‘ஸ்கைலிஃப்ட்’ வாகனங்களைப் பயன்படுத்தி சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தத் தீ விபத்தினால் ஒரு வீடு முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன் அந்த வீட்டில் சிக்கியிருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






















