• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்குப் படிக்கவே தெரியாது. - எம். ஆர். ராதா.

சினிமா

எப்போதுமே எனக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாமல் நான் நாடகத்திற்குப் போகமாட்டேன்.
எல்லோரும் என்னைப் பொல்லாதவன். ரௌடி, அநாகரிகப் பயல்னு நினைச்சுக்கிட்டிருந்தாங்க.
இன்னும்கூட ரொம்பப் பேர் அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது சௌகரியமாயிருக்கு.
என்னைப் பார்க்கப் பயந்துக்கிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்ரதில்லே. அதனாலே என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது.
நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியாயிருக்கேன்.”
“தோட்டமா?”
“ஆமா... இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவுது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே,
எம்.ஜி.ஆர் தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன்.
அங்கே காய்கறியெல்லாம் போடப்போறேன். மாடுங்க வேறே வளர்க்கிறேன். காலையிலே, நாலரைக்கெல்லாம் எழுந்து அங்கே போயிடுவேன்.
கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வைக்கோல் போடறது,
இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ... சம்பாதிச்சாச்சு, வயசோ ஆவுது... இனிமே குடும்பம், கொழந்தைங்கன்னு நினைக்கத்
தோணுது.
விவசாயத்திலே புத்தி போவுது. இது நடுவிலே யாராவது வந்து கூப்பிட்டா, போய் நடிக்கிறேன். அவ்வளவுதான்.
நான் ஒருத்தரையும் போய்ப் பார்க்கிறதில்லே. சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லை... மத்தவங்க மாதிரி இவனைப் போடாதே, அவளோட
நடிக்க மாட்டேன்னு கண்டிஷனெல்லாம் போடறதும் கிடையாது.”
மாடர்ன் தியேட்டர்ஸ்ல சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி.ஆர்.சுந்தரத்திற்கும் எனக்கும் சின்னத் தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோட வாழ முடியாதுன்னு தெரிஞ்சுது.
இந்தச் சினிமா தொழிலே வாணாம்னு அதுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது

‘இரத்தக் கண்ணீர்’ சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரில நாடகம் போட்டுக்கிட்டிருக்கிறபோது என்னை வந்து கூப்பிட்டாங்க. லட்சத்து
இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன்னேன். கொடுத்தாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.”
“தமிழ் சினிமா இவ்வளவு வருஷத்திலே முன்னேறி இருக்கா?”
“தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா, ‘சப்ஜக்ட்’ தான் ‘அட்வான்ஸ்’ ஆகல்லே. போட்டி
போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பாக்கறாங்க. சொந்தப் பணத்தைப்போட்டு டிக்கெட்டை வாங்கி இரண்டு வாரத்துக்கு
‘ஹவுஸ் ஃபுல்’ போர்டு மாட்டிச் சந்தோஷப்படறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது?
இதுவா முன்னேற்றம்? நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நானும் சர்விஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும்.
எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?”
“நீங்க, படத்திலே மூணு நாலு குரல்லே பேசறீங்களே, ஏன்?”
“அதென்னமோ எனக்குத் தெரியாது. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. நடிக்கறபோது இயற்கையாகவே அப்படி வந்துடுது. நான் வேணும்னு
குரலை மாத்தறது இல்ல.”
``நீங்க இந்தி நடிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?”
“அவங்க சென்னைக்கு வந்தா, என் படங்களைப் பார்த்துட்டு என்னைப் பார்க்கணும்னு சொல்லுவாங்களாம். என்னை வந்து பார்த்துட்டு, உங்களைப்
போல என்னாலே நடிக்க முடியாதுன்’னு சொல்லிட்டுப் போவாங்க.
ஓம்பிரகாஷ், சுனில் தத் இன்னும் யார் யாரோ வந்து அப்படிச் சொல்லிட்டுப் போயிருக்காங்க...”
“நீங்க நடிக்கிற படங்களையெல்லாம் நீங்க பார்க்கிற வழக்கம் உண்டா?”
“நான் சினிமாவுக்கே போக மாட்டேன். ‘மதர் இந்தியா’, ‘தோ ஆங்கே பாரா ஹாத்’ பார்த்தேன். ரத்தக் கண்ணீர், ராஜாதேசிங்கு இப்படி இரண்டு மூன்று
தமிழ்ப் படம் பார்த்திருக்கேன்.”
“உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றியெல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?”
“பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்குப் படிக்கவே தெரியாது.
எழுத்துக்களை ‘கம்ப்போஸ்’ செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம்.
என்கிற படிப்புதான். வேறே பள்ளிக்கூடத்திற்கு நான் போனதில்லே.”
“சினிமாவால சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடையாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதைப் படித்துவிட்டு ‘இந்தத் தொழில்லே சம்பாதிச்சுகிட்டே அப்படிப் பேசுவது முறையா”ன்னு சில பேர் ஆத்திரப் பட்டாங்களே, உங்களுக்குத் தெரியுமா?”
“ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிறவனுக்குத்தான் அதிலுள்ள தீமையெல்லாம் தெரியும். அவன்தான் ‘அத்தாரிட்டி’ யோட
பேச முடியும். அதுலேயே இருந்துகிட்டு அதைத் திருத்தறவன்தான் தைரியசாலி!”

 

- விகடன் இதழ் பேட்டியில் ராதா சொன்னது.
 

Leave a Reply