• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் திரை உலகம் கொண்டாட மறந்த மேதை....

சினிமா

தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்கள் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசை அமைப்பாளர்கள் ராக ராஜாங்கம் நடத்தி இருக்கிறார்கள். அதில் ஒரு சில இசை அமைப்பாளர்கள் தவிர, பெரும்பாலானவர்கள் மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது தன்ராஜ் மாஸ்டரிடம்தான். தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவர்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யா சாகர், ஷியாம் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

இசை ஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார். இளையராஜா தமது முதல் படமான அன்னக்கிளியில் மெட்டுக்களிலும், இசைச் சேர்ப்பிலும், வாத்திய அரேஞ்ச்மேன்டிலும் அசத்தி இருக்கிறார் என்றால், அது தன்ராஜ் மாஸ்டரிடம் அவர் பயின்ற பாடம்தான் என்று, திரை இசை அலைகள் என்ற தமது நூலில், எழுத்தாளர் வாமணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.பார்த்தசாரதி, எல்.வைத்தியநாதன் போன்ற ஒரு சிலரைத் தவிர, அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களும் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றவர்களே என்றும் வாமணன் கூறுகிறார். இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் வாத்தியாராக இருந்த தன்ராஜ் மாஸ்டர், இசைப்பயிற்சிப் பள்ளி எதுவும் நடத்தவில்லை. ஆனால் அவர் தங்கியிருந்த மைலாப்பூர், லஸ் கார்னர் சாய் லாட்ஜ், அறை எண் 13-க்கு வந்து போகாத கர்நாடக, மேற்கத்திய இசை மேதைகளும் இல்லை, இசை அமைப்பாளர்களும் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட இசை மேதை எதற்க்காக அங்கே ஒதுங்கினார் என்பதுதான் வருத்தத்துக்குரியது.

கிடார் இசையும், ட்ரம்ஸ் ஒலியும், பியானோவின் மெல்லோசைகளும் அந்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில், திரை வாத்தியக் கலைஞர்கள் பலரும், அந்தப் படிகளில் எறியவர்கள்தான். அந்த வரிசையில் ஒருவர்தான் இளையராஜா. சென்னையில் வாய்ப்பு தேடி, அவர் சந்தித்த அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி ஆகிய துன்பங்களுக்கு மத்தியில்தான், அவர் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்.

வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் தன்ராஜ் மாஸ்டர் பணமே வாங்கவில்லை. இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார். பியானோ கற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன். எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.... வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார். என்று சங்கீத கனவுகளில் தன்ராஜ் மாஸ்டர் பற்றி இளையராஜா நினைவு கூர்ந்துள்ளார்.

ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றியவரும் தன்ராஜ் மாஸ்டரே. பின்னர் அன்னக்கிளி படத்துக்கு இசை அமைக்கும் போதுதான், அதை இளையராஜா என்று பஞ்சு அருணாசலம் மாற்றினார். அதேபோல் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானும், தமது எட்டாவது வயதில் இருந்து தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் கற்க ஆரம்பித்தார். ஸ்லம் டாக் மில்லியனேயர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றபோது, அவர் தன்ராஜ் மாஸ்டரை நினைவு கூர்ந்தார்.

150 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஆசிரியரும், 28 முறை சிறந்த இசைப் பயிற்சி ஆசிரியர் விருதைப் பெற்றவருமான அப்துல் சத்தாரும், இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு இசை கற்றுக் கொடுத்ததுடன், வருங்கால தலை முறையும் பயன் பெரும் வகையில் இசை வழி 180 டிகிரி, பிரம்ம மேள பிரமாணம் என்ற இரு இசை நூல்களையும் எழுதியுள்ளார். இவை இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்த்திரை இசையமைப்பாளர்கள் பலருக்கும் துரோணாச்சாரியாராகத் திகழ்ந்த தன்ராஜ் மாஸ்டரை, மாஸ்டர்களுக்கு எல்லாம் மாஸ்டராக இருந்து வழி காட்டிய தன்ராஜ் மாஸ்டரை தமிழ் திரை உலகம் பெரிய அளவில் கொண்டாடவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

Murugesan N

Leave a Reply