• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

இலங்கை

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது.

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை அமைச்சின் பல அதிகாரிகளுடன், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களை வரவேற்றனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன,  நாட்டிற்கு பெரும் கௌரவத்தை ஈட்டிய திறமையான விளையாட்டு வீரர்களுக்கு எங்கள் மனமார்ந்த மரியாதை மற்றும் வாழ்த்துக்கள்! – என்றார்.

இந்தியாவின் ரஞ்சியில் மூன்று நாட்கள் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 40 பதக்கங்களை வென்றது.

போட்டியை நடத்தும் அணியான இந்தியா, 20 தங்கம், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் உட்பட மொத்தம் 58 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

பதக்கப் பட்டியலில் நேபாளம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

தெற்காசிய தடகளப் போட்டியின் நான்காவது சீசனில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் என ஆறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள் 37 போட்டிகளில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply