• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுவேலா – அமெரிக்காவின் அடுத்த இலக்கு?

உலகமெங்கும் உள்ள வல்லாதிக்க சக்திகள் தமது இராஜதந்திர நோக்கங்களை நிறைவு செய்து கொள்ளும் நோக்குடன் ஏனைய நாடுகள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் படையெடுப்புகளை மேற்கொள்வது காலங்கடந்த ஒரு போக்காக உள்ள போதிலும் தற்காலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் அது தொடரவே செய்கின்றது. அத்தகைய ஒரு அண்மைக்கால எடுத்துக்காட்டாக வெனிசுவேலா உள்ளது. அந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் நோக்குடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. களமிறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்தச் செய்தியை உறுதிசெய்யும் நோக்குடன் ஊடகர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்துள்ள பதில் அந்தத் தகவலை மறைமுகமாக உறுதிசெய்வது போல உள்ளது.

ஷஅமெரிக்காவின் கொல்லைப்புறம்| என அறியப்படும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கடந்த நூற்றாண்டு முழுவதிலும் சி.ஐ.ஏ. மேற்கொண்ட தலையீடுகள் எண்ணுக் கணக்கில் இல்லாதவை. இராணுவச் சதி மூலமான ஆட்சிக் கவிழ்ப்புகள், அரசியல் படுகொலைகள், ஊடகங்களை விலைக்கு வாங்குதல், தேர்தல்கள் முடிவுகளைத் தமக்குச் சாதகமாக மாற்றுதல், தொழிற் சங்கங்களை விலைக்கு வாங்குதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல், தமது கொள்கைக்கு எதிரான அரசியல் தலைவர்கள் மீது சேறு பூசுதல், தமது அரசியல் சிந்தனைக்கு ஆதரவான அரசியல்வாதிகளுக்கு முட்டுக் கொடுத்தல், திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பதில் தாக்குதல் நடத்த அரச இயந்திரத்தைத் தூண்டுவதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளல், பயங்கரவாதக் குழுக்களைத் தோற்றுவித்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுதங்களை வழங்குதல் எனப் பல்வேறு நாசகார வேலைகளை சி.ஐ.ஏ. இந்தக் காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தது.

கடந்த காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளை சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளியிடப்படும் இரகசிய ஆவணங்கள் பல நடவடிக்கைகளைப் பகிரங்கப்படுத்தி உள்ளன. இவை தவிர ஏனைய உலக நாடுகள் அவ்வப்போது வெளியிட்ட அறிக்கைகள், மனித உரிமை அமைப்புகள் தந்த தகவல்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் உரைகள் ஆகியவை அமெரிக்காவின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் உள்ளன. இருந்தபோதிலும், வெளிப்படையாகத் தனது நடவடிக்கைகளை அறிவிப்பது அமெரிக்காவின் வழக்கம் அல்ல. ஷமனித உரிமைகளைப் பேணுதல், ஜனநாயகத்தைக் காப்பாற்றுதல், உள்நாட்டு மக்களின் குரல்களைச் செவிமடுத்தல், போதைப்பொருள் ஒழிப்பு, குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துதல், பயங்கரவாதத்தை ஒழித்தல்| என்பது போன்ற சொல்லாடல்களுள் மறைந்துகொண்டு அமெரிக்கா தனது வல்லாதிக்க நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றது.

வெனிசுவேலாவைப் பொறுத்தவரை ஹியூகோ சாவெஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போதைய நிக்கலஸ் மதுரோ ஆட்சிக் காலம் வரை அமெரிக்காவின் கொள்கை ஆட்சியாளர்களுக்கு விரோதமானதாகவே இருந்து வருகின்றது. கரக்காஸில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்களை எப்படியாவது அகற்றிவிட்டு, தனது சொல்கேட்டு நடக்கக் கூடிய, உலகப் பெரு முதலாளிகளின் நலன்களைப் பேணக் கூடிய, முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். இந்த நோக்கங்கள் எவையும் வெனிசுவேலா மக்கள் மீது கொண்ட அன்பினால் எழுந்தவை அல்ல. மாறாக தனது கொல்லைப்புறத்தில் புதிதாக உருவாகியுள்ள சோசலிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு அரசாங்கத்தை முடக்குவதும், சோசலிசக் கொள்கைகள் அந்தப் பிராந்தியத்தில் மேலும் பரவுவதைத் தடுப்பதும், அந்த நாட்டில் உள்ள கனிம வளங்களைத் தங்கு தடையின்றிச் சுரண்டும் நோக்கமும் கொண்டவையே.

மக்களின் வாக்குகளினால் தெரிவான அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் தந்து, உள்நாட்டில் குழப்பநிலையை உருவாக்கக் கூடிய குழுக்களுக்கு அதரவு வழங்கிவந்த அமெரிக்க நிர்வாகம் தற்போது புதிதாகக் கையில் எழுத்துள்ள ஆயுதமே ஷபோதைப்பொருள் ஒழிப்பு|. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வெனிசுவேலாவில் நடைமுறைப்படுத்திவரும் பொருளாதாரத் தடைகள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் மீது விதித்துள்ள பயணத் தடைகள் என்பவற்றைத் தாண்டி வெனிசுவேலாக் கரையோரமாக உள்ள கடலில் பயணிக்கும் கப்பல்களையும், படகுகளையும் தாக்கி அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை ஏழு கடற் கலங்கள் அமெரிக்கப் படைகளினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அதனுள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் அடக்கம். 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அழிக்கப்பட்ட கடற் கலங்களும், கொல்லப்பட்ட நபர்களும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு பட்டவர்கள் என அமெரிக்கா சொல்லி வருகின்ற போதிலும் அதற்கான ஆணித்தரமான ஆதாரங்கள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை.

ஆனால், கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் எனவும், அழிக்;கப்பட்டவை மீன்பிடிப் படகுகள் எனவும் பிராந்தியத்தில் உள்ள கொலம்பியா, ரினிடாட் மற்றும் ரொபாகோ ஆகிய நாடுகள் கூறி வருகின்றன. நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர். ஒருவர் கொலம்பிய நாட்டவர், மற்றவர் ஈக்குவடோர் குடிமகன். படகுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் சாதாரண மீனவர், அவர் நீண்ட காலமாகத் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெற்ரோ தெரிவித்துள்ளார்.

தெற்குக் கரிபியன் பிராந்தியத்தில் 10,000 வரையான அமெரிக்கப் படையினர் நிலைகொண்டு உள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த பி-52 ரக போர் விமானங்களும், கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மதுரோவின் தலைக்கு 50 மில்லியன் டொலர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷசன்ஸ்| எனப்படும் போதைப் பொருள் கும்பலை அவர் வழிநடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை தரப்படவில்லை.

இதேவேளை, தன் மீதும் தனது அரசாங்கத்தின் மீதும் அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ளார். 'இது முன்னெப்போதும் இல்லாதது. சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்ட நாள் முதலாக எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும் கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், நாடுகளை அழித்தல் என்பவற்றுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்ததில்லை. முதல் தடவையாக அது தற்போது நடைபெறுகிறது. வெனிசுவேலாவின் எண்ணெய், எரிவாயு, தங்கம் உள்ளிட்ட வளங்கள் மீது ஏகாதிபத்தியவாதிகள் பேரார்வம் கொண்டிருக்கிறார்கள்" என்றார் அவர்.

தனது தலைமையிலான ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சில விட்டுக்கொடுப்புகளுக்கு மதுரோ தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ள போதிலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு ட்ரம்ப் முன்வரவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இந்நிலையில், மதுரோ தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்காக எத்தகைய நிலைக்கும் செல்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.

மறுபுறம், உள்நாட்டில் அமெரிக்கா மேற்கொள்ள நினைக்கும் சாகச நடவடிக்கைகளை எதிர்கொள்ள தமது படையினரைத் தயார் படுத்தும் வேலையில் மதுரோ ஈடுபட்டு வருகின்றார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடும் முனைப்புக் கொண்ட தொண்டர் படையினரையும் அவர் உருவாக்கி வருகின்றார்.

அமெரிக்காவுடன் ஒப்பீடு செய்தால் வெனிசுவேலா ஒரு சுண்டைக்காய் நாடு என்பதாகவே புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவின் மாபெரும் முற்றுகையை எதிர்த்து நின்று வெற்றிகண்ட கியூபா நாட்டுக்கு உள்ளது போன்ற இயற்கை அரண் கூட வெனிசுவேலாவுக்குக் கிடையாது. ஆனால், சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இறுதிவரை போராடும் முடிவிலேயே மதுரோவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட உலகின் எந்தவொரு நாடும் தற்போதைய நிலையில் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகின்றது. ஷமரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை| என்பதற்கு ஒப்பவே வெனிசுவேலாவின் தற்போதைய நிலவரம் உள்ளது.

தான் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள் உலகம் முழுவதிலும் எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் கூறி வருகிறார். புதிய போர்கள் உருவாவதற்கான வாசல்களை ஒருபுறம் அவர் திறந்து வருகிறார் என்பதை அவருக்கு யார் எடுத்துச் சொல்வது?

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply