ஆசியான் உச்சிமாநாட்டில் டிரம்ப் - தாய்லாந்து, கம்போடியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.























