• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே மாதத்தில் 2-வது கொலை முயற்சி - சாக்லெட்டில் விஷம் தடவியதாக ஈகுவடார் அதிபர் குற்றச்சாட்டு

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா (37) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷசாக்லெட் கொடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி–னர். அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என ராணுவ மந்திரி கியான் கார்லோ லோப்ரெடோ கூறினார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்ற சம்பவம் ஈகுவடார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Leave a Reply