• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைரக்டர் கே. சங்கர், என்னிடம் எம்.ஜி.ஆர். பாட்டுக்கான காட்சியை விளக்கினார்.

சினிமா

‘நாட்டில் – ஒரு சர்வாதிகாரி மன்னனாக இருந்து ஆட்சி நடத்துகிறான். மக்களைக் கொத்தடிமையாக்கி – அவர்களை அரசன் தன் விருப்பத்திற்கேற்ப இயங்க வைக்கிறான்.
ஒரு நடன மாது; அவள் தன் குழுவினருடன் ஆடித் தெருமக்களை மகிழ்விப்பவள்; அவளால்,
மக்கள் மான உணர்வு பெறுகிறார்கள் என்று அறிந்த மன்னன் –
அவளை ஆடக் கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரிகள் மூலம் தாக்கீது அனுப்புகிறான்.
அந்த நடனமாது, மன்னன் கட்டளையை எப்படி மீறுவது என்று அஞ்சித் தன் குழுவினரோடு புறப்பட எத்தனிக்கையில் –
கதாநாயகன், அவள் அச்சத்தைப் போக்கும் விதமாக ஓர் எழுச்சிப் பாடலைப் பாடி ஊர்ச்சனங்களையும் கூட்டி, அவர்களுக்குள் விடுதலை வேட்கையை விதைக்கிறான்!’
– இப்படி சங்கர் அவர்கள் சொன்னவுடன் நான், ‘உலகத்தில் இறைவன் கட்டளைதான் செல்லும்; வேறு எவன் கட்டளையும் எடுபடாது’ எனும் பொருள்படும்படி –
‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’
– என்று பல்லவியைத் தொடங்கி எழுதலானேன்.
இயக்குநர் சங்கரின் முகம், திடீரென்று இறுகியது; சுற்றியிருந்த உதவி இயக்குநர்கள் முகங்களும் ஒருவகை அச்சத்தில் வெளிறின!
எம்.ஜி.ஆர். ஒரு வினாடி, என்னை உற்று நோக்கினார்.
சற்று முன், என்னுடைய முந்தைய பாடலைக் கேட்டு நெகிழ்ந்த அவர் –
சகல சந்தோஷங்களையும் தொலைத்து விட்டு – என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
எம்.ஜி.ஆர். உள்பட – இப்படி என்னைச் சுற்றியிருந்த எல்லோருடைய முகங்களிலும் ஏன் எதற்காக எது குறித்து, இத்தகு மாற்றம் என்பது எனக்குப் புலப்படாது போனதால் –

நான், குழப்பம் என் விழிகளில் குமிழியிட்டடிக்க, சற்று அசௌகரியமான சூழ்நிலைக்கு ஆட்பட்டேன்.
எப்பாதும் என்னை ‘ஆண்டவனே!’ என்று விளிக்கும் எம்.ஜி.ஆர். –
‘என்னங்க வாலி!’ என்று அழைத்து மேலும் தொடர்ந்தார்.
‘உங்களுக்கு – என்னை அவமானப்படுத்தணும்னு எண்ணம் இருந்தா, அதை நேர்லயே செய்யலாமே! ஏன் – இப்படி ஒரு பாட்டு எழுதி என்னை ஏளனம் செய்யுறீங்க?’
– எம்.ஜி.ஆர். இப்படிக் கேட்டதும், நான் வேர்த்து வெலவெலத்துப் போனேன்; ஒரு விநாடி என் மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது நாக்கு!
பிறகு –
அச்சத்திலிருந்து விடுவித்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு –
‘என்னண்ணே, இப்படிப் பேசுறீங்க? நான் எங்கே உங்களை அவமானப்படுத்தினேன்? அதுவும் இந்தப் பாட்டுலே உங்களை ஏளனம் பண்ணதாச் சொல்றீங்க! எனக்கு ஒண்ணுமே புரியல்லியே அண்ணே!’
என்று, தலையும் வாலும் புரியாத ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறதே எனும் வியப்பு என்னை ஒருபுறம் விரட்ட, வினவினேன்.
‘நீங்க – என்ன பல்லவி எழுதியிருக்கீங்க? அதை நீங்களே படிச்சுப் பாருங்க... நான் சொல்றது, உங்களுக்குப் புரியும்!’ என்று எம்.ஜி.ஆர். சினம் குறையாமல் என்னைச் சீண்டினார்.
நான் – பல்லவியைப் படித்தேன்.
‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’
– என்று படித்துப் பின், மேற்கொண்டு எம்.ஜி.ஆரிடம் கேட்டேன், ‘இதுல என்னண்ணே தப்பு?’ என்று,
‘இந்தப் படத்துக்கு நான் என்ன பெயர் வெச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘தெரியுமண்ணே! அரச கட்டளை-ன்னு வெச்சிருக்கீங்கன்னு தெரியுமே!’ என்று விடையிறுத்தேன் நான்.
இறுதியாக –
எம்.ஜி.ஆர். தன் கோபத்திற்கான காரணத்தை விளக்கலானார்.
“ ‘அரசகட்டளை’ நான் நடிக்கிற படம்; ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜி நடிச்ச படம். நீங்க என்ன எழுதியிருக்கீங்க? ‘ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும்?’னு எழுதினா, சிவாஜி படத்துக்கு முன்னாடி உன் படம் என்னாகும்னுதானே கேக்கறதா அர்த்தம்!” என்று படபடவென்று பொரிந்து தள்ளினார் எம்.ஜி.ஆர்..
அப்போதுதான் அந்தப் பாடல், இப்படி ஒரு அர்த்தம் கொடுக்கிறது என்பதை நான் அறிந்தேன்.
‘அண்ணே! கடவுள் சத்தியமா – இப்படி ஒரு அர்த்தத்தை மனசுல வெச்சு நான் எழுதலே!
கதைக்குத் தகுந்த மாதிரி, நாடாளும் மன்னனைப் பார்த்து, ‘கடவுளை விட உன் ஆணை பெரிதா என்று நீங்க கேக்கற மாதிரி எழுதினேனே தவிர – இதுலே, வடிவேலறிய வஞ்சனை இல்லை’ என்று நான் –
ஊரில் உள்ள தெய்வங்களின் மேலெல்லாம் சத்தியம் பண்ணியும், எம்.ஜி.ஆர். ஏதோ ஒப்புக்கு சமாதானமானாரே தவிர, முழுக்க convince ஆகவில்லை!
மறுநாள் –
அந்தப் பாட்டை திரு. முத்துக்கூத்தனை எழுத வைத்து, recording செய்து விட்டார்!
அந்தப் பாடல்தான் :
‘ஆடிவா! ஆடிவா! ஆடப் பிறந்தவளே! ஆடி வா!’
– என்பது!

 

- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்ஜியார் 'தொடரிலிருந்து .


 

Leave a Reply